Sunday, July 28, 2019

மனித வாழ்வின் புரிதல்கள் - 1

Date: 27th July, 2019

இன்று ஒரு வேலை நிமித்தமாக சென்னையில் உள்ள கந்தன்சாவடி ஏரியாவிற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு ஆட்டோக்காரர் என்னைக் கூப்பிட்டு தம்பி, இந்த மொபைல் போன் ஆன் ஆக மாட்டிது. கொஞ்சம் ஆன் பண்ணிக் கொடுப்பா என்றார்.

அந்த மொபைல் போனை கையில் வாங்கிப் பார்த்தேன். அது ஒரு விவோ மாடல் புது மொபைல் போன். அப்பொழுது அவருடைய சட்டைப் பையில் டச் பேட் ரக பழைய மொபைல் போன் ஒன்று இருந்ததையும் பார்த்தேன்.

அதைப் பார்த்தவுடன், யாரோ ஆட்டோல வந்தவங்க போனை மிஸ் பண்ணிட்டாங்க போல, அத எடுத்து இவரு வச்சிருக்காரோ என்று நினைத்துக் கொண்டேன். ஆன் பட்டனை தொடர்ந்து அழுத்தி, போன் ஸ்டார்ட் ஆனதும் அவர் கையில் கொடுத்தேன். எங்க பேட்டர்ன் லாக்க கரெக்டா போடுறாரா பார்ப்போம்னு ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு இந்த போன்லா யூஸ் பண்ணத் தெரியாது தம்பி. என் மகன் தான் வேணாம்னு சொல்லியும் வாங்கிக் கொடுத்தானு சொல்லிக்கொண்டே கரெக்டா பேட்டர்ன் லாக்கப் போட்டார். ரொம்ப கஷ்டமான "ட' வடிவ பேட்டர்ன் லாக் அது.

பேட்டர்ன் லாக் போட்டு உள்ள போனா, பிங்க் கலர் சர்ட், ஜீன்ஸ் அண்ட் கூலர் அணிந்தவாறு வால்பேப்பரில் ஒரு பையன் சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கு என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது. கண்டிப்பாக அது அவர் மகனாகத் தான் இருக்க முடியும்.

சே... இவரப் போயி தப்பா நினைச்சுட்டோமேனு கொஞ்சம் பீல் பண்ணிட்டிருக்கும் போதே, தம்பி  விரல் வச்சா ஒர்க் ஆகும்னு பையன் சொன்னான், ஒர்க் ஆக் மாட்டிது போலனு சொல்லிட்டே தன்னுடைய விரலை போன் பின்புறம் உள்ள சென்சாரில் எடுத்து எடுத்து வைத்து செக் பண்ணிக் கொண்டிருந்தார்.

அண்ணா, நீங்க ஏற்கனவே பேட்டர்ன் போட்டு போனை அன்லாக் பண்ணிட்டிங்க. அதுனால இப்போ பிங்கர் பிரிண்ட் ஒர்க் ஆகாது என்று சொல்லிவிட்டு போனை லாக் பண்ணிட்டு, இப்போ டிரை பண்ணுங்க என்றேன்.

இப்பொழுது அவருடைய விரலை சென்சாரில் வைத்ததும், வெரிபிகேசன் சக்ஸஸ் ஆகி உள்ளே போனதும் அவர் பையன் மீண்டும் வால்பேப்பரில் சிரித்துக் கொண்டிருந்தார்.

ரொம்ப தாங்க்ஸ் தம்பினு சொல்லிவிட்டு யாருக்கோ போன் பண்ண ஆரம்பித்தார்.

அந்த ஆட்டோக்காரர் சொன்னார், எனக்கு இந்த போன்லா யூஸ் பண்ணத் தெரியாது தம்பி,  என் மகன் தான் வேணாம்னு சொல்லியும் வாங்கிக் கொடுத்தாருனு சொல்லிட்டு சிறு புன்னகை செய்தார். இப்பொழுதும் என் கண் முன் நிற்கிறது அந்த புன்னகை.

என் அப்பாவிற்கு நான் ஏன் இந்த சிரிப்பைக் கொடுக்கவில்லை என்று யோசித்தேன். அப்பொழுது இந்த மாதிரி ஒரு போனை அவருக்கு வாங்கிக் கொடுக்க எனக்குத் தோணவில்லை, ஒருவேளை  அப்பொழுது அவ்வளவாக என்னிடம்  பணமில்லாமல் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். இப்பொழுது என்னால் வாங்கிக் கொடுக்க முடியும், ஆனால் அதை வாங்கிக் கொள்வதற்கு அவர் இப்பொழுது இல்லை.

இந்த மனித வாழ்க்கையும் அதன் புரிதல்களும் கொஞ்சம் விசித்திரமான ஒன்றாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

- வினோத்குமார் ராஜேந்திரன்.