Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, October 13, 2016

வாழ்க்கை என்னும் நீண்ட பயணம்...

வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். அதன் பயண தூரமானது அவரவர்களின் விதியைப் பொறுத்தது.

நாம்  பொதுவாக பயணம் மேற்கொள்வதை இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன. ஒன்று பயண நோக்கம் / காரணம், மற்றொன்று சேரும் இடம். இவை இரண்டும் தெரிந்தால்தான் பயணம் சாத்தியமாகும்.

வாழ்க்கை என்ற பயணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த இரண்டு விடயங்களும் நமக்கு தெரியாது. அதனை அறிந்து கொள்ள பயணிப்பதே வாழ்க்கை.


நமது படைப்பின் நோக்கம் என்ன? அதை அறிந்து கொள்ள நினைத்தது உண்டா?

தனக்காக,
தன் குடும்பத்திற்காக,
தன் சமூகத்திற்காக,
தான் வாழும் இந்த பூமி, இயற்கைக்காக,
நாம் செய்த, செய்ய வேண்டிய செயல்கள் / கடமைகள் என்ன?

இல்லை மற்ற ஜீவராசிகளைப் போல பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து விட வேண்டியவர்களா மனிதர்கள்?

உணவு, உழைப்பு, காமம், தூக்கம் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தக் கூடிய பொது உணர்வுகளை மட்டும் பெற்றவர்களா மனிதர்கள்?

மனிதர்களுக்கு மட்டும்தான் வாழ்க்கையா?

மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கை என்பது கிடையாதா? அதனை உணர்ந்து நாம் பயணித்தது உண்டா?

வாழ்க்கையில் எப்பொழுதும் நாம் தேடிச் செல்வது ஒன்றுதான்.
அது இன்பம். ரஜினி வசனத்தில் சொல்வதென்றால் “மகிழ்ச்சி”.

பிடித்த உணவை சாப்பிடுவது,
பிடித்த செயலை செய்வது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த ஆணிடம் / பெண்ணிடம் பேசுவது.
இவ்வாறாக இன்பம் தரக்கூடிய செயல்களை தேடி செய்வது / செல்வதுதான் மனித வாழ்க்கையின் அடிப்படையாக இருக்கிறது.

அந்த ஆனந்த தேடலில் நாம் துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்த துன்பங்களை எதிர்கொள்வதனால் உருவான அனுபவங்களை, அடுத்த தேடலுக்கான எதிர்மறையாக மாற்றாமல்
துன்பத்தின் விளைவாய் கிடைத்த அனுபவங்களை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அடுத்த தேடலை நோக்கிச் செல்வதுதான் வாழ்க்கை.

ஆனால் தாம் செய்யும் செயல் துன்பத்தை விளைவிக்கும் என்பது தெரிந்தும் கண நேர சந்தோசஷத்திற்காக அதனை விரும்பி செய்பவர்கள் ஏராளம். புகை பிடிப்பது, மது அருந்துவது, பாலியல் தவறுகள், திருடுவது, பிறரை ஏமாற்றுவது போன்ற எண்ணற்ற செயல்கள்.

எவ்வளவு பெரிய துயரத்திற்கும்
மிகச் சிறந்த மருந்து, காலம்.
நாட்கள் செல்ல செல்ல அதன் ரணம் குறைந்து நாளடைவில்
அந்த துயரம் முற்றிலும் மறைந்து போகும் சாலையில் மறையும் கானல் நீர் போல...

Saturday, January 23, 2016

மின்சார ரயிலில் ஒரு பயணம்…

நெடுந்தொலைவு பயணங்களும் அதன் சுவாரஷ்யமான நிகழ்வுகளும் எப்பொழுதும் நம் மனதில் நிற்கும். ஆனால் அவை அந்த பயணங்களைப் பற்றி நினைக்கும் பொழுது மட்டுமே.

மாறாக சிறு தொலைவு பயணமானாலும், அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமான தொடர் பயணங்கள் நமக்கு பல புரிதல்களையும், சில படிப்பினையையும் நல்குகின்றது என்பது உண்மை. அப்படி ஒரு பயணமான மின்சார ரயிலில் ஒரு பயணம்…


Ø ரயில் வருவதை தமிழ், ஆங்கிலம் மற்றும் "யாத் ரிகள் க்ருபாயா ஜாந்தெ சென்னை பீச் ஜானே வாலி அக்லி காடி தீம் நம்பர் ப்ளாட்பார்ம்" என ஹிந்தியிலும் திரும்ப திரும்ப அறிவிக்கும் அறிவிப்பாளர்கள்.

Ø கூட்ட நெரிசலுக்குப் பயந்து, டிக்கெட் எடுத்த பொது வகுப்பில் பயணம் செய்யாமல், போலியாக முதல் வகுப்பில் பயணம் செய்யும் சந்தர்ப்பவாதிகள். (நானும் சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக இருந்துள்ளேன்.)

Ø ரயிலில் இருக்கைகள் இருந்தாலும் படியில் நின்றுதான் பயணம் செய்வேன். அதுவும் நிற்கும்போது ஏறமாட்டேன், ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஓடும்போதுதான் ஏறுவேன் என்னும் கெத்து இளைஞர்கள்.

Ø ஒரு ஹெட் போனை ஆளுக்கு ஒரு காதில் வைத்துக் கொண்டு பாடல்களை ரசித்தவாறு பயணம் செய்யும் ஆண், பெண் நண்பர்கள்.

Ø தங்கள் நிறுவனத்தின் ஐ.டி.கார்டை வீட்டிலிருந்தே அணிந்தவாறு காலையில் அலுவலகம் சென்று, இரவில் வீடு திரும்பும் அலுவலர்கள்.

Ø தேர்விற்காக தேர்வரை வாசலில் தீவிரமாய் படிப்பது போல இந்த சிறு பயண இடைவெளியில் புத்தகத்தை  கரைத்து குடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் (பெரும்பான்மை).

Ø கொஞ்சல், சினுங்கல், மழலைப் பேச்சு என சுதந்திரமாக செயல்பட விரும்பும் குட்டிஷ்கள், அவர்களின் செயல்களை ரசித்தவாறு கட்டுப்படுத்த முயற்சி செய்யும் பெற்றோர்கள்.

Ø ஒரு அழகான பெண் தன் அன்பானவருடன் சிரித்து பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கிறான் என தெரிந்து, அவள் மீதான பார்வையை விலக்கினாலும், மறுபடியும் அவளை பார்க்கச் சொல்லி தூண்டும் மனம் கொண்ட கலாரசிகர்கள்.

Ø காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். எனக்கென்னவோ காதலர்களுக்குத் தான் சில நேரங்களில் பார்வை தெரிவதில்லை என தோன்றுவதுடன், மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு அளவளாவி பேசி மகிழும் ஜோடிகள்.

Ø பிழைப்புக்காக வேறு மாநிலங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் மூட்டை முடிச்சுகளுடன் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் நவீன் அகதிகள்.

Ø கடற்கரையில் இருந்து கொண்டு வந்த மீன் கூடைகளை ரயிலின் ஒரத்தில் அடுக்கி பாதி இடத்தை அடைத்ததுடன், தானும் கூடையின் அருகிலேயே அமர்ந்து அன்றைய தின வியாபாரத்திற்கு தயாராகும் பாட்டிமார்கள்.

Ø எதிரே உள்ள இருக்கைகள் காலியாக உள்ள போது தன் இரு கால்களையும் (சிலர் செருப்புகளுடன்) அந்த இருக்கைகளில் வைத்து தான் பயணம் செய்வேன் என்ற பரந்த மனம் கொண்ட பொதுநலவாதிகள்.

Ø கவனக் குறைவாலும், தற்கொலை எண்ணத்தாலும் ஒடும் ரயில் வண்டியில்  மோதி மண்ணுக்கு இரையாகும் முன்னோர்கள்.

இவ்வாறாக பல மனிதர்களின் பல விதங்களை இந்த சிறு பயணத்தில் காண்கிறேன்.

Ø தன் இயலாமையை காட்டி பிழைக்க வழி தெரியாமல் பிச்சை எடுப்பவர்களுக்கும்,

Ø சும்மா காசு கேட்டால் யாரும் தரமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு தன் ஊனமுற்ற கால்களால் நகர்ந்து ரயிலின் தரைப் பகுதியை ஒரு துணியால் சுத்தம் செய்தும், கண் பார்வை தெரியாதவர்கள் புல்லாங்குழல் வாசித்தும், சிறு இசையை எழுப்பியவாறு பாடல்கள் பாடிக்கொண்டும்,

Ø குறவர் மக்கள் தன் சிறு குழந்தையை பல்டி அடித்தல், வளையத்துக்குள் புகுந்து வெளிவருதல் போன்ற செயல்களை செய்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கும்,

Ø கண் பார்வை இல்லாவிட்டாலும் ஒரு குச்சியினை வைத்து தட்டி தட்டி நடந்து வேர் கடலை பருப்பி, வாசனைப் பொருள்கள் விற்பவர்களுக்கும்,

Ø 4 ஆப்பிள் 50 ரூபாய், 4 மாதுளை 50 ரூபாய், ஊசி, பாசி, சிப்ஸ், வறுகடலை, என பலவகைப் பொருட்களை விற்பவர்களுக்கும்,

Ø கை தட்டி உரிமையோடு பயணிகளை தொட்டு காசு கேட்கும் திருநங்கைகளுக்கும்,

Ø கூடுவாஞ்சேரி அருகே 1 சதுர மீட்டர் ரூ. 900, செங்கல்பட்டு அருகே சதுர மீட்டர்  ரூ. 1300, கையில் மொபைல் இருந்தால் போதும் மாத வருமானம் ரூ. 10000, அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனத்தில் (ஆனால் இதுவரை எந்த விளம்பரத்திலும் நிறுவனத்தின் பெயரை பார்த்ததில்லை.) 30,000 ரூபாய் சம்பளத்திற்கு ஆட்கள் தேவை போன்ற விளம்பரங்களுக்கும்

நகரும் ஊர்தியான இந்த மின்சார ரயில் மறைமுக வியாபாரமாகவும், நேர்முக வியாபாரமாகவும், நகரும் விற்பனை மையமாகவும், வழிகாட்டியாகவும், ஆதரவற்றோர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதை காண்கிறேன்.

ரயிலில் ஒரு சிறு பெண் தன் ஏழ்மையை காட்டி ஒரு ரூபாய் ஸ்டிக்கரை ஆறு ரூபாய்க்கு என்னிடம் விற்கிறாள். அவள் ஏமாற்றுகிறாள் என்பது தெரிந்தும் அவள் நிலையை பார்த்து  நான் ஏமாளியாகவே விரும்புகிறேன்.

ஆறு ரூபாய் கொடுத்துவிட்டு ஸ்டிக்கரை வாங்கிப் பார்த்தவுடன் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை என்ற நிலையில், இல்லைபா எனக்கு ஸ்டிக்கர் ஏதும் வேணாம். காச நீயே வச்சுக்கோ என்று சொன்னேன். சும்மா காசு வேணாம்ணா எதுவாச்சும் வாங்குறதுன மட்டும் காச வாங்கிக்கிறேன் என்று சொன்னாள். ஒரு நிமிடம் நான் அந்த தருணத்தில் அவளை நினைத்து பெருமிதம் கொண்டேன்.

இவ்வாறாக சில புரிதல்கள், பார்வைகள் மற்றும் சந்திப்புகளுடன் என் தொடர் பயணம் தொடர்கிறது...

- Vinothkumar Rajendran

Friday, October 2, 2015

நவீன அகதிகள்

தன்னுடைய குடும்பத்துக்காக ஒருவன் வேலை தேடி வேறு மாநிலத்துக்கு போனால் அது அவனுடைய கடமை.

பிழைக்க வழியில்லாமல் மூட்டை முடிச்சோடு அந்த குடும்பமே வேறு மாநிலத்துக்குப் போனால் அது அரசினுடைய மடமை...

Wednesday, August 19, 2015

கல்லூரி கட்டணம் முதல் மாத சம்பளம் வரை...

ஒரு காலத்தில் என்ஜினியரிங் படிப்பு என்பது மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. அதற்கு கல்லூரிகளின் எண்ணிக்கை, கட்டணம், பொருளாதாரம், நுழைவுத் தேர்வு என பல்வேறு காரணங்கள் இருந்தன.

ஆனால்.,

இன்றைய நிலைமையில், தடுக்கி விழுந்தால் என்ஜினியரிங் படிப்பு என்றாகிவிட்டது. 552 என்ஜினியரிங் கல்லூரிகளை (தமிழ்நாட்டில்) வைத்துக்கொண்டு வருடந்தோறும் இலட்சோப இலட்சம் பொறியாளர்களை உருவாக்குகிறோம் . விளைவு, பொறியியல் என்கிற விசயம் அதன் மகத்துவத்தை இழந்து வருகிறது.

கிராமப்புற மாணவர்களும் கூட பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான் நுழைவுத் தேர்வு நீக்கம், கட்ஃஆஃப் மதிப்பெண் குறைப்பு இவையெல்லாம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள் ! இதன் இன்னொரு பரிமாணம் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.

என்ஜினியரிங் என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்று கூட தெரியாத அளவுக்கு பல ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

ஒருபுறம் கல்லூரிகளில் வளாகத் தேர்வு மூலமாக அனைத்து துறை மாணவர்களையும் (கணிணி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேசண்மேலும் பல துறைகள்) தேர்வு செய்து அவர்களுக்கும் படிப்புக்கும் தொடர்பில்லாத வேலைகளில் அமர்த்துகிறார்கள்.

இது மான்கள், புலிகள், குதிரைகள், பசுக்கள் போன்ற எல்லா விலங்குகளையும் தேர்வு செய்து உங்களுடைய வேலை நரியை போன்று நடிப்பது என்பது போல் உள்ளது. (இது நிறுவனங்களின் தவறு கிடையாது. அவர்களின் தேவை அவ்வளவுதான்.)

மறுபுறம் 5000, 6000 ரூபாய் சம்பளத்துக்கு கால் சென்டர், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேலும் பல படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் காலத்தை ஓட்டுகிறார்கள்.

5 இலட்சம் ரூபாய் செலவு (கடன் வாங்கி) செய்து 4 வருடங்கள் என்ஜினியரிங் படித்தவனும், 50,000 ரூபாய் செலவு செய்து 3 வருட டிகிரி படித்தவனும் ஒரே வேலை செய்கிறான்.

இன்னொரு புறம், கிடைக்கும் வேலையை படிப்பிற்கு தகுதி இல்லாத வேலை என்று சொல்லிக் கொண்டும், குறைந்த சம்பளத்திலாவது எதாவது வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் எத்தனையோ வேலை இல்லா பட்டதாறிகள் நாட்டில் இருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு கல்லூரிகளையோ, அரசாங்கத்தையோ குறை கூறுவதை விட மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தான் குறை கூற வேண்டும்.

மற்ற எல்லா படிப்புகளைப் போல என்ஜினியரிங்கும் ஒரு படிப்புதான். பிறகு ஏன் இதற்கு மட்டும் இவ்வளவு பெரிய மோகம்? சிந்தியுங்கள்….  

இந்தியாவில் சில நிறுவனங்களே மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்து, உரிய பயிற்சிகளை கொடுத்து அந்தந்த வேலைக்கு தகுந்தவாறு மாற்றுகிறார்கள்.

பெரும்பாலான நிறுவனங்கள் அந்தந்த வேலைக்கு தேவையான அனைத்து திறமைகளும் (skills) உள்ள பட்டதாரிகளை தான் எதிர்பார்க்குகிறார்கள். ஆட்களை எடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளை கொடுப்பதற்கு அந்த நிறுவனங்களுக்கு நேரமும் பணமும் தடையாக உள்ளன.

இந்த நிறுவனங்களின் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்தந்த வேலைக்கு தகுதியான திறமைகள் உள்ள ஆட்கள் கிடைப்பதில்லை.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, நம்முடைய கல்லூரி பாடத்திட்டம் மட்டும் நம்முடைய வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும் வேலைக்கு தேவையான பல திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது.

பெரும்பாலான மாணவர்கள் .டி (IT) வேலை என்றால் ப்ரொக்ராம்மிங் (Programming), டிசைன் (Design) சார்ந்த வேலை மட்டும் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவை தவிர .டி இன்டஸ்ட்ரியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. [SEO, Social Media Marketing, Testing, Business analyst, multimedia, L&D, Sales, marketing, Admin, HR, finance.. etc].

இதே போன்றே எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என இதர துறைகளிலும் அறியப்படாத அதே சமயம் ஆட்கள் தேவைப்படும் அநேக கிளைத்துறைகள் இருக்கின்றன.

ஆகவே மாணவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளையும், அதற்கான திறமைகளையும் ஆராய்ந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சுய திறமைகளை கண்டறிந்து அதை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.